மதிய உணவு திட்டம் – இந்தியாவின் முன்மாதிரி தமிழகம்!

முன்னுரை பீகாரில் கடந்த வருடம் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானது நாட்டையே உலுக்கியது. தற்போது, மீண்டும் பீகார்மாநிலம் சித்தாமர்ஹி எனும் இடத்தில் மதிய உணவுடன் சேர்த்து ஒரு பாம்பையும் சமைத்ததால் 54 குழந்தைகள் உடல்நலம் குன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்று கூறுவது உண்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற பழமொழி நம் நாட்டில் பிரபலம். எனவே குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை மிகுந்த கண்காணிப்புடன் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.  தமிழகத்தில் 1950களில் இருந்து இன்று வரை இயங்கி கொண்டு இருக்கும் மதிய உணவு திட்டம் மாபெரும் வெற்றியை கண்டது மட்டும் இல்லாமல் நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதை நம் […]

முன்னுரை

பீகாரில் கடந்த வருடம் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானது நாட்டையே உலுக்கியது. தற்போது, மீண்டும் பீகார்மாநிலம் சித்தாமர்ஹி எனும் இடத்தில் மதிய உணவுடன் சேர்த்து ஒரு பாம்பையும் சமைத்ததால் 54 குழந்தைகள் உடல்நலம் குன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்று கூறுவது உண்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற பழமொழி நம் நாட்டில் பிரபலம். எனவே குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை மிகுந்த கண்காணிப்புடன் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 

தமிழகத்தில் 1950களில் இருந்து இன்று வரை இயங்கி கொண்டு இருக்கும் மதிய உணவு திட்டம் மாபெரும் வெற்றியை கண்டது மட்டும் இல்லாமல் நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதை நம் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இந்த வெற்றிக்கு காரணம் தமிழக ஆட்சியாளர்கள் மதிய உணவு திட்டத்தில் சுகாதாரதிற்கும் ஊட்டச்சத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததால் தான். பிறந்த குழந்தை முதல், கர்பிணி பெண் தொடர்ந்து ஏன் கல்லறை செல்லும் வரை கூட தமிழக மக்கள் அரசாங்கத்தால் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். இதை பற்றிய விரிவான கட்டுரை பின்வருமாறு.

மதிய உணவு திட்டம் ஒரு சகாப்தம்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ் நாட்டில் தான் ஏழை பள்ளிக் குழந்தைகளுக்குப் பகல் உணவு இலவசமாக வழங்கும் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவு திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே திட்டம் பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவு திட்டம் என்ற பெயரில் அனைத்து குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் ஆரம்பம் ஒரு சுவாரசியமான நிகழ்வின் மூலம் சாத்தியமானது.

காமராஜர் முதல்வராக இருந்த போது ஒருமுறை அவர் காரில் கிராமப்புறத்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்தபோது ஒரு இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு கார் நிறுத்தப்பட்டதால் காரிலிருந்து இறங்கி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களை சந்திக்க நேரிட்டது.. காமராஜரை கண்டவுடன் மக்கள் அவரை நோக்கி வந்தனர். அவர்களை நலம் விசாரித்த காமராஜர், அவர்களுடன் பல சிறுவர்களும் இருப்பதை கண்டார். “இந்த சிறுவர்கள் பள்ளி செல்லவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டார் காமராஜர். “ஐயா, எங்களிடம் வசதி இல்லை” என்று பதில் வந்துள்ளது.

பள்ளிக் கல்வி இலவசம் என்ற நிலைமையிலும் அந்த மக்கள் வசதியில்லை என்று கூறியது காமராஜரை யோசிக்க வைத்தது. பின்னர் அவர்கள் வசதி இல்லை என்று குறிப்பிட்டது மதியம் குழந்தைகளுக்கு ஆகும் உணவு செலவை என்பதை தெரிந்து கொண்டார் காமராஜர்.

1955-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த காமராஜர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார்.

பின்னர் இந்த மதிய உணவு திட்டம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபணைகளையும் சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும், முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி  பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறியதாவது: “அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு,ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்”.

இவ்வாறே ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் காமராஜர். ஒரு வேளை உணவருந்த கூட வழியில்லாமல் இளம் வயதினர் வேலைக்கு செல்வதை தடுக்க அவர்களுக்கு பள்ளிகளிலேயே படிப்போடு உணவும் இலவசமாக வழங்கிவிட்டால் கல்வியறிவு தடை படாமல் கிடைக்கும் என்பது அந்த மாமனிதனின் எண்ணமாக இருந்தது. 

இது நடைபெற்றது 1956 ஆம் ஆண்டு. அன்றைய நிலைமையில் வறுமையில் வாடிய சுமார் 20 லட்சம் குழந்தைகள். 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தொடக்கக் கல்வி நிலையங்களில் ஆண்டுக்கு 200 நாட்கள் இந்த இலவச மதிய உணவை உண்டு பலனடைந்தனர். பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவுக்கு உத்திரவாதம் கிடைத்தபின் பெற்றோர்களும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினர்.

மதிய சத்துணவு திட்டம்

1982-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழக அரசின் “முதலமைச்சரின் மதிய சத்துணவுத் திட்டம்” தொடங்கப்பட்டது. அப்போது தமிழ் நாட்டின் கிராமப்புறங்களில் குழந்தைகள் நல மையங்களான 20 ஆயிரத்து 747 இடங்களிலும், மதிய உணவுக்கூடங்கள் 32 ஆயிரத்து 470 ஆரம்பப் பள்ளிகளிலும் உணவு தயாரித்து 55 லட்சத்து 96 ஆயிரம் குழந்தைகளுக்கு சராசரி 400 கலோரி உணவு வழங்கப்பட்டது. இதே ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டத்தை நகர்ப்புற தொடக்கப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனால் கூடுதலாக மேலும் 6 லட்சத்து 50 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பலனடைந்தனர்.

இந்த திட்டத்தினால் கிராமப்புறங்களில் குழந்தைகளின் போஷாக்கு, உடல்நலம் ஆகியன முன்னேறியது. தமிழ் நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்தது. பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைய மட்டுமின்றி இடைநிற்றல் விகிதமும் குறிப்பிட தக்க அளவு குறைந்தது.

அனைவருக்கும் உணவு

கர்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு அவரவர் வீட்டிற்கே வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார ஊட்டச்சத்துக்களும் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கள் வீட்டிற்கே அரசாங்கத்தால் வழங்கப் படுகிறது. இரண்டு முதல் ஐந்து வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு அங்கன்வாடிகளிலும், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்நிலை பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

சத்துணவில் முட்டை

காமராஜருக்கு பிறகு இந்த திட்டத்தை தொடர்ந்த எம்.ஜி.ஆர் மதிய உணவில் வாரம் ஒரு முட்டையை சேர்த்தார். பிறகு கருணாநிதி அதை இரண்டு முட்டையாக உயர்த்தி இன்று ஜெயலலிதா வாரம் ஐந்து முட்டைகளை மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிறார்.

காட்சி 1 – தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்து பள்ளி

இந்த கிராமத்தில் 300 வீடுகள் இருக்கின்றன. அதில் 200 வீடுகள் மக்கள் குடிபெயர்ந்த காரணத்தினால் பூட்டியே இருக்கின்றன. பள்ளி செல்லும் வயதில் சுமார் 25 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் இந்த குறிப்பிட்ட பள்ளியின் மாணவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டாயிடம்.

இந்த பள்ளியின் மதிய உணவு அமைப்பாளர் ஜெயலக்ஷ்மியிடம் பேசுகையில் இத்தனை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பள்ளியில் மொத்தம் 5 இடங்களில் மாணவர்களுக்காக உணவு சமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மிகவும் சுத்தமாக பராமரிக்கப் பட்ட சமயலறையில் காய்களை வெட்டிக் கொண்டிருந்தார் ஜெயலக்ஷ்மி. சமயலறையில் அடுப்புகளோ, எரிவாயு சிலிண்டர்களோ அல்லது மின்சார அடுப்புகளோ தென்படவில்லை. பழங்கால விறகுகள் தான் இருந்தன. அதில் தான் உணவு சமைக்கப்படுகிறது.

மதிய உணவிற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் 150 கிராம் சாதமும், 15 கிராம் பருப்பும், ஒரு முட்டையும், காய்களுக்காக 80 பைசாவும் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் அரசாங்கத்தின் மூலம் ஒரு எவர்சில்வர் தட்டும், டம்ளரும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் தினமும் வீட்டிற்கு எடுத்து சென்று மீண்டும் ஒவ்வொரு நாளும் கொண்டு வருகின்றனர்.

மதிய உணவு சாப்பிட வந்த மாணவர்களுடன் பேசும் போது உணவு எப்பொழுதும் சூடாகவே பரிமாறப் படுவதாகவும், சில சமயங்களில் உணவு பிரமாதமாக இருப்பதாகவும் சில நாட்களில் பிடிக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தனர். விடைபெறுகையில் ஜெயலக்ஷ்மி கூறியதாவது “பீகாரில் நடந்ததை போன்ற சம்பவம் இங்க நடைபெற வாய்ப்பே இல்லை. தினமும் காய்களை நானே பார்த்து வாங்குகிறேன். முட்டைகள் கெட்டு போனதாக தெரிந்தால் உடனே தூக்கி வீசி விடுவேன். சமைத்த உணவுகள் எப்பொழுதும் மூடியே வைக்கப் பட்டு இருக்கும். அது மட்டுமின்றி கடந்த 9 வருடங்களாக சமைத்த உணவை முதலில் நான் சாப்பிட்டு விட்டு குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் குழந்தைகள் உண்ணுவார்கள். எனவே ஏதேனும் குறை இருந்தால் எனக்கு முதலில் தெரிந்து விடும்” என்று ஒரு தாய் தன் குழந்தைகளை பராமரிப்பது போன்று பொறுப்புடன் பேசினார்.

காட்சி 2 – திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்து பள்ளி

பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துராணி. 17 வருடங்களாக இந்த பள்ளியில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறார். தாயம்மா எனும் பெண் இங்கு சமையல் வேலைகளை கவனித்துக் கொள்கிறார். இந்த சமயலறையிலும் அதே காட்சிகள். விறகு, முட்டை, காய்கள், அரிசி, பருப்பு. 

வகுப்புகள் முடிந்து மதிய உணவுக்காக மாணவர்கள் சமையலறையை நோக்கி வந்தனர். தாயம்மா ஒரு மாணவரின் தட்டில் அழுக்கை கண்டதும் வெளியில் சென்று நன்றாக கழுவி விட்டு வருமாறு கடிந்து சொல்கிறார். அடுத்து ஒரு மாணவனை பார்த்து “மூன்று நாட்களாக ஏன் பள்ளிக்கு வரவில்லை?” என்று கேட்கிறார். அந்த மாணவன் கோவில் திருவிழாவிற்கு சென்றதால் வரவில்லை என்று பதில் அளிக்கிறார். மாணவர்களை வரிசையில் நிற்க வைத்து உணவு கொடுப்பது பிடிக்காது எனவே கல்யாண பந்தியை போல அனைவருக்கும் தினமும் இங்கு உணவு பரிமாறப்படுகிறது என்று கூறுகிறார்கள். மாணவர்களும் சிறு வயதாக இருப்பினும் ஒரு பருக்கை கூட கீழே சிந்தாமல் மெதுவாகவும், பொறுப்பாகவும் உணவு சாப்பிடுகின்றனர்.

பராமளிப்பாளர் முத்துலட்சுமியிடம் பீகார் சம்பவத்தை பற்றி கேட்டதற்கு அது போல் சம்பவம் இங்கு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார். காய்கள் ஒவ்வொரு நாளும் வாங்கப்படுவதாகவும், முட்டை கெட்டு போய் விட்டால் ஒரு நொடி கூட யோசிக்காமல் தூக்கி வீசப்படுவதாக தெரிவித்தார். இவர் முதலில் உணவை சாப்பிட்ட பின்பு தான் மாணவர்களுக்கு வழங்கப்படுமாம். உணவில் ஏதேனும் குறை இருந்தால் நிச்சயம் முதலிலேயே தெரிந்துவிடும் என்கிறார் 27 ஆண்டுகளாக இந்த பள்ளியில் வேலை செய்துக் கொண்டு இருக்கும் மற்றொரு ஊழியர் முத்துலட்சுமி.

அங்கன்வாடிகள்

கர்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தும் ,பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார ஊட்டச்சத்துக்களும் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்களும் வழங்கப் படுவது அங்கன்வாடிகள் மூலம் தான். கைக் குழந்தை ஒரு வயதை கடப்பதற்கு முன்பே அங்கன்வாடிகள் முதல் முட்டையை ஊடச்சதிற்காக வழங்குகிறது.

காட்சி 3 – திருசெந்தூர் அருகில் இருக்கும் நாலுமாவடி எனும் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி

அடுத்தக் காட்சி திருசெந்தூர் அருகில் இருக்கும் நாலுமாவடி எனும் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில். இந்த அங்கன்வாடி தினமும் 5 வயதுக்கு கீழ் இருக்கும் 7 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறது. அந்த குழந்தைகளுக்கு சாப்பிடும் முன் கையை நன்றாக கழுவ வேண்டும் என்றும் அதன் நன்மைகள் என்ன என்றும் அங்கே வேலை செய்யும் ஊழியர்கள் தாயன்புடன் கூறியதை கேட்டதும் இன்றைய வாழ்க்கையில் தான் பெற்ற குழந்தைக்கு சோறு கூட ஊட்ட நேரமில்லாமல் பணியாட்களை நியமித்து வாழும் நகர வாழ்க்கையை எண்ணி வெட்கி தலைகுனிய நேர்கிறது.

அங்கன்வாடியின் அமைப்பாளர் சுபஸ்ரீ இங்கு அனைத்தையும் பராமரித்துக் கொள்கிறார். இந்த அங்கன்வாடிகென்று சொந்தமாக ஒரு அறையும், ஸ்டோர் ரூமும் இருக்கிறது. சுத்தமான தண்ணீரும் உள்ளே கிடைக்கின்றது. விறகுகளுக்கு பதில் அடுப்பு இங்கே இருக்கிறது. குக்கரில் சமைக்கின்றனர். அங்கன்வாடியின் சுவர் முழுதும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. மக்கள் இந்த அங்கன்வாடியை பள்ளி என்றே அழைக்கின்றனர். 

அம்மா உணவகங்கள்

அது மட்டும் இல்லை. பசி என்பதே என்னவென்று கேட்க்க முடியாத அளவுக்கு தற்போது “அம்மா உணவகங்கள்” ஆயிரகணக்கான மக்களின் பசியை நித்தமும் தீர்த்துக் கொண்டு இருக்கின்றன. ஒரு ரூபாய்க்கு இட்லியும், மூன்று ரூபாய்க்கு தயிர்சாதமும், ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதமும் வழங்கும் அட்சய பாத்திரங்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

காட்சி 4 – சென்னை கே.கே.நகரில் உள்ள அம்மா உணவகம்

அம்மா உணவகத்தின் உள்ளே சாப்பாட்டுக்கு ஒரு வரிசை. ஒரு அழுக்கு உடை இளைஞன் வரிசைக்கு வெளியே நின்று, வரிசையில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ கேட்டான். அவன் கூறியது “இங்கதான் விஜயராகவபுரத்துல இருக்கேன். இப்ப காசில்ல. ஒரு அஞ்சு ரூபா தர்றீங்களா. நாளைக்கு தந்திடுறேன்” என்று சன்னமான குரலில் கேட்டுக்கொண்டிருந்தான். முன்னே வரிசையில் நின்றிருந்த இன்னொரு இளைஞன் தன் கையில் இருந்த இரண்டு டோக்கன்களில் ஒன்றைக் கிழித்துக் கொடுத்தான்.

கடவுளைப் பார்ப்பது போல அந்த டோக்கனைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே பின்புறம் நீண்டிருந்த வரிசையில் போய் நின்று கொண்டான் அந்த அழுக்கு உடை இளைஞன்.

இன்னொருவர் தனது டோக்கனை சாப்பாட்டுக் கவுண்ட்டரில் நீட்டி “ஒரே ஒரு சாம்பார் சாதம் என்கிறார். சாம்பார் சாதத்தைத் தயாராகத் தட்டில் போட்டு வைத்திருந்த அந்தத் தாய் அவரின் முகத்தை ஒரு கணம் ஏறிட்டுப் பார்க்கிறார். ‘ஒரே ஒரு’ என அவர் உதிர்த்த வார்த்தையும், நான்கைந்து நாட்களாக ஷேவ் செய்யப்படாமல் இருந்த அவரது முகமும், இரண்டு மணி நேரம் ஊர்சுற்றியிருந்ததால் அவரின் முகத்தில் தெரிந்த அலுப்பும் அந்த தாய்க்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டும்! அவரின் கைக்கு வந்துவிட்ட தட்டைத் திரும்ப வாங்கி, இன்னும் ஒரு கரண்டி சாதத்தைப் சேர்த்து போட்டார்! (தாயுள்ளம் பசியறியும்?!)

வயிறுகள் வாழ்த்தும் இந்தத் திட்டம் நிரந்தரமாகச் செயல்பட வேண்டுமே என அன்றுபூராவும் இந்த இருவரது மனமும் நிச்சயம் நினைத்திருக்கும். 

தமிழகத்தின் வெற்றிக்கு காரணம்

1982-ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு தமிழக அரசு செலவழித்த தொகை 120 கோடி. 1982-ஆம் பட்ஜெட் செலவீனமான ருபாய் 1576 கோடி என்ற கணக்கில் 7.6 சதவீதம் ஆகிறது. 2013-ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு தமிழக அரசு செலவழித்த தொகை 1486 கோடி. 2013-ஆம் ஆண்டு பட்ஜெட் செலவீனமான ருபாய் 1,17,915 கோடி என்ற கணக்கில் 1.3 சதவீதம் ஆகிறது. சத்துணவு திட்டத்தின் பின்னணியை நினைத்து பார்த்தல் காமராஜரும், எம்.ஜி.ஆரும் எந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டனர் என்பது புலப்படும். மக்கள் நல்வாழ்வு திட்டங்களை எப்படி கட்டமைப்பது என்பதை மேலை நாடுகளின் படித்த மேல்தட்டு அறிஞர்கள் விவாதித்து முடிவு காணாத நிலையில், தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏழ்மையின் முழு பரிணாமங்களையும் அறிந்திருந்ததால் தான் காமராஜராலும், எம்.ஜி.ஆராலும் இலவச உணவு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் குறுகிய வாக்கு வங்கி அரசியலுக்காக நிறைவேற்றப்படாமல் தொலைநோக்கு சிந்தனையுடனும், உண்மையான அக்கறையுடனும் செயல் படுத்தப்பட்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். அதனால் தான் இந்த ஒரு திட்டம் மட்டும் தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் யாராலும் தவிர்க்க முடியாமல் தொடர்கிறது.

முடிவுரை

டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நாட்டின் தேவையை புரிந்து கொள்ளும் தகுதி கூட இல்லாத அரசியல்வாதிகள் உணவு பாதுகாப்பு மசோதா என்று பேசிக் கொண்டு இருக்கும் வேளையில் தமிழ் நாடு அந்த விஷயத்தை ஒரு மசோதாவும் இல்லாமல் சட்டமும் இல்லாமல் எவ்வளவு எளிதாக மக்களிடம் நேரடியாக செயல் படுத்தியுள்ளது என்பது தெரியாமல் இருக்கிறதா? அல்லது இவ்வாறு மக்களுக்கு நேரடியாக பயனடையும் திட்டத்தை செய்தால் ஏதும் கொள்ளை அடிக்க முடியாது என்று நினைக்கின்றார்களா என்று நமக்கு புரியவில்லை.

புதிய சட்டம் ஒன்றும் இல்லை, 50,000 கோடி ரூபாய் ஒதுக்கி பசியை போக்குவேன் என்று சபலமிட்டு பாதிக்கும் மேற்பட்ட பணத்தை கொள்ளை அடிக்கும் எண்ணம் இல்லை (இதுவரை பசியை போக்குகிறேன் என்று ஒதுக்கிய ஆயிரம் ஆயிரம் கோடிகள் யார் பசியை போக்கியதோ இறைவனே அறிய மாட்டார்!). இவை ஏதும் இன்றி கருவறை முதல் கல்லறை வரை தன் மக்களுக்கு பசி என்ற ஒன்றே தெரியாத அளவுக்கு உணவளிக்கிறது தமிழகம். 

எந்த கட்சிதான் கொள்ளை அடிக்கவில்லை? எந்த அரசியில்வாதி 100 சதவீதம் சரியாக இருக்கின்றார்? என்ன தான் ஊழல், ஆட்சி சரி இல்லை என்று தமிழக கட்சிகள் மீது குறை கூறினாலும் காமராஜர் தொடங்கி அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரை தன் மக்களை வயிறார சாப்பிட வைத்து, பசி என்ற ஒன்றை தமிழகத்தில் இருந்த நீத்த இந்த அரசியல்வாதிகளை நினைத்து தமிழனாய் நிச்சயம் நான் பெருமைப்படுகிறேன்!

Dr. SG Suryah

Dr. SG Suryah

State Secretary of BJP Tamil Nadu and in-charge for East Chennai district. Writes on politics, history and the nation, mostly in Tamil.

More about him

Make A Comment

Keep reading

The Day Congress Agreed to Gift Assam to Pakistan

Yesterday, as I watched Prime Minister Narendra Modi speak in Guwahati, I felt a strange mix of emotions—vindication,…

Asianet News Tamil: யார் இந்த SG சூர்யா? இளம் வயதில் பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பு கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்..!

தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 44 பேர் அடங்கிய…

சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பு

ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் இந்திய சுதந்திரத்திற்கு அளப்பரிய பங்காற்றி இருந்தாலும், சுதந்திர போராட்டத்தின் போது மாபெரும் சக்தியாக விளங்கிய போதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுதந்திர போராட்ட…
Close

Bold. Relentless. For the People.

UP