ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் இந்திய சுதந்திரத்திற்கு அளப்பரிய பங்காற்றி இருந்தாலும், சுதந்திர போராட்டத்தின் போது மாபெரும் சக்தியாக விளங்கிய போதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுதந்திர போராட்ட பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் முயற்சிகள் தொடர்ந்து 75 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்திய அளவில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியும் இந்த பிரச்சாரத்தை ஆண்டாண்டுக் காலமாக முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் 1947-ஆம் ஆண்டு 15-ஐ கருப்பு தினமாக கொண்டாடிய திராவிடர் கழகமும் அதன் விந்தான தி.மு.க-வும் ஆர்.எஸ்.எஸ் சுதந்திரத்திற்கு போராடவில்லை என இன்று பிரச்சாரம் செய்வதும் நகைமுரணின் உச்சம். இந்தியாவை விட்டு வெளியேறாதீர்கள் என பிரிட்டிஷார் கால்களை பிடித்து கெஞ்சியவர்கள், திராவிட நாட்டைக்கோரி பாகிஸ்தானின் தந்தையான ஜின்னாவுக்கு கும்பிடு போட்ட ஈ.வெ.இராமசாமியின் வழித்தோன்றல்கள் இந்திய சுதந்திரம் பற்றியும், தேசபக்தியே கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தூற்றுவதும் வெட்கமற்ற தன்மையின் உச்சம்.
இந்த வாதங்கள் அனைத்தும் “காங்கிரஸ் கட்சி மட்டுமே சுதந்திரத்திற்கு துணை புரிந்தது“ என்கிற கட்டமைக்கப்பட்ட வலிமையான பிம்பத்தின் தோன்றல்கள் என்பதும் அழுத்தமாக குறிப்பிட வேண்டிய உண்மை. இவ்வாறு காங்கிரஸ் பெருமையை மட்டுமே பாடுபவர்கள், காங்கிரஸுடன் இணைந்து போராடிய மற்ற தலைவர்களையும் அவர்கள் சார்ந்த இயக்கங்களையும், கட்சிகளையும் புறக்கணித்து விடுகிறார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது சீரிய சமூக மற்றும் பேரிடர் நிவாரண பணிகளின் மூலமாக பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியோ காந்தியின் கொலையோடு ஆர்.எஸ்.எஸ்இயக்கத்தை தொடர்பு படுத்தி, அந்த இயக்கத்தையே இருட்டடிப்பு செய்ய முயன்றது என்பது மறைக்க முடியாத உண்மை.
1920-களில் காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளராக இருந்த நேரத்தில் ‘முழுமையான சுதந்திரம்” என்கிற கோஷத்தை முன்வைத்தவர் ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகரான திரு.ஹெட்கேவர் முன்வைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியை முதலாளித்துவ ஏகாதிபத்தியம் என்று வர்ணித்தார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் ஒரு “சுய ஆட்சி” முறையை மட்டுமே கோரியது. ஆரம்ப காலகட்டத்தில் காந்தி அவர்களுடன் இணைந்து ஹெட்கேவர் பல போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டார், பிறகு 1921-இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டு ஒரு வருடம் சிறை வாசம் அனுபவித்தார்(1921 மற்றும் 1930). நாடு முழுவதும் இந்த ஒத்துழையாமை இயக்கத்திற்கு வலிமை சேர்த்த ஹெட்கேவர், அவர்களின் பேச்சுக்கு தடை விதிக்கப்பட்டது.
1923-ஆம் ஆண்டு டாக்டர். என்.எஸ்.ஹர்திகரால் ஹிந்துஸ்தானி சேவா தளம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இளைஞர்களை கட்டுக்கோப்பாக வைக்கவும், சுதந்திரத்திற்கு பாடுபட தயார் செய்யவும் ஆயத்தமானது. குறிக்கோளும் கட்டுப்படும் அற்ற தொண்டர்களை நெறிப்படுத்த முனைந்தது இந்த அமைப்பு. ஆனால் அப்போதைய காங்கிரஸ் கட்சியோ ஹிந்துஸ்தானி சேவா தளம் மட்டுமின்றி மேலும் பல அமைப்புகளுக்கு எதிராக பணியாற்றியது. காங்கிரஸ் அமைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் இந்த ஒடுக்குமுறை பின்பற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இனம் மற்றும் வகுப்பு வேறுபாடுகளை தாண்டிய ஒடுக்குமுறை வழக்கங்களில் இருந்து விடுபட்ட ஒரு தேசிய உணர்வை வெகுஜன பிரச்சாரத்தின் மூலம் உருவாக்க 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்(ஆர்.எஸ்.எஸ்) உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த அமைப்பில் வெறும் 22 உறுப்பினர்களே இருந்தனர். முழு சுதந்திரத்தை 1920-இல் வலியுறுத்திய பிறகு ஏறத்தாழ பத்து வருடங்கள் கழித்து “லாஹூர் கூட்டத்தில்” காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய “முழு சுதந்திர” தீர்மானத்தை டாக்டர்.ஹெட்கேவர் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் முழுமனதுடன் வரவேற்றது. 1930 ஜனவரி 26-ஆம் தேசிய பகவா(காவி) கொடி வணக்கத்திற்காக எல்லா ஸ்வயம்சேவாக்குகளும் திரள வேண்டும் என்று எல்லா ஷாக்காக்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டது.
1940-ஆம் ஆண்டு டாக்டர்.ஹெட்கேவர் மறைவிற்கு பிறகு அதன் சர்சங்கசாலக்காக(தலைவராக) பொறுப்பேற்றகுருஜி கோல்வால்கர் தலைமையில் சுதந்திர போராட்டத்தை தொடர்ந்தது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சத்யாகிரஹ போராட்டமும்
தண்டி யாத்திரியில் 1930-இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கு மிக முக்கியமானது. அதில் பங்கேற்ற டாக்டர்.ஹெட்கேவர் தான் வகித்து வந்த ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக்(தலைவர்) என்கிற பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த பிறகே இந்த போராட்டத்தில் பங்கேற்றார். சுதந்திர போராட்டத்தை காங்கிரஸ் என்ற ஒற்றை இயக்கத்தின் கீழ் இருந்துதான் நடத்த வேண்டும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. காங்கிரஸில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டே, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவாறு இந்து சமூக முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கையாக இருந்தது, அதையே அவர் வலியுறுத்தினார். 21 ஜூலை 1930-இல், மகாராஷ்டிர மாநிலம் யாவாத்மாவில் சத்யாகிரஹம் நடத்தியதற்காக 9மாதங்கள் சிறைவாசத்திற்கு தள்ளப்பட்டார் ஹெட்கேவர். அங்கு அவர் கடும் உடல் உழைப்பில் ஈடுபடவேண்டியிருந்தது. அவரோடு 100 ஸ்வயம்சேவகர்கள் அகோலா சிறைக்கு சென்றார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதை ஹிந்து மகாசபை கடுமையாக எதிர்த்து. ஆனாலும், டாக்டர்.ஹெட்கேவர்காங்கிரஸை ஆதரித்துக் கொண்டே, இரண்டு இயக்கங்களுக்கும் இடையே ஆரோக்யமான உறவை ஏற்படுத்தி கொண்டிருந்தார்.
1932 வாக்கில் ஆர்.எஸ்.எஸ் பிரபலமடைய தொடங்குகிறது, அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சி சட்டம் பிரிவு 23 கீழ் எந்த அரசு ஊழியரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. 1933 ஜனவரி மாதத்தில் பிரிட்டிஷ் செயலர் M.K.ஹன்லெட், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பற்றிய முழு விவரத்தையும் சேகரிக்க வேண்டும் என்ற உத்தரவையே கொடுத்திருக்கிறார்.
கடுமையான தடங்கல்கள் கொடுக்கப்பட்டும், ஆர்.எஸ்.எஸ் அசூர வேகத்தில் வளர்வதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை எப்படியாவது முடக்க வேண்டும் என்கிற நோக்கில் டிசம்பர் 1933-இல் அதே செயலர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு “மத” சாயம் பூசி, ஆசிரியர்கள் இந்த இயக்கத்தில் சேர்வதை தடை செய்தார். 1934-இல் நடந்த காங்கிரஸின் மத்திய கமிட்டி கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு பிரிட்டிஷ் அரசு கொடுத்த அழுத்ததையும், தடங்கல்களையும் கடுமையாக எதிர்த்ததற்கான சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்
1940-இல் டாக்டர்.ஹெட்கேவர் மறைவிற்கு பிறகு, கோல்வால்கர் தலைமையின் கீழ் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக இயங்க ஆரம்பித்தது. இவர் குருஜி என்று இயக்க வட்டாரத்தில் அறியப்பட்டார். 1942-இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் மகாராஷ்டிராவின் விதர்பா மாகாணத்தில் மிக வீரியமாக போராட்ட தீ பற்றிக்கொண்டது. அது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மிக வலுவாக இருந்த பகுதி. இந்த போராட்டம் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான தாதா நாயக், பாபுராவ் பகட்கே மற்றும் அண்ணாஜி அவர்களால் நடத்தப்பட்டது. இதில்காங்கிரஸின் உத்தவராவ் கோரேகாரும் இதில் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் பாலாஜி ராய்புற்கர் என்கிற இளம் ஸ்வயம்சேவகர் கொல்லப்பட்டார். இதன் பிறகு பிரபலமான “சிமுற் போராட்டம்” நடைபெற்றது. இதில் 125 சாத்தியகிரகிகளும் ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்களும் சிறை சென்றார்கள். 1943-இல் ஸ்வயம்சேவகர் ஹெமு காலணி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தாதா நாயக் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1943-இல் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்களின் பெயர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மட்டுமின்றி,தேசம் முழுவதும் இந்த போராட்டத்தில் சிறை சென்ற ஸ்வயம்சேவகர்களின் பட்டியலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
1942-இல் அரசு அலுவலகத்தில் இந்திய கொடி ஏற்ற முனைத்தற்காக 6 பேர் சுட்டு கொல்லப்பட்டார்கள், அதில் இரண்டு பேர் இளம் ஸ்வயம்சேவகர்களான தேவிபத் சௌத்திரி மற்றும் ஜெகபதி குமார். பல நேரடியான போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஈடுபட்டிருந்தாலும் அதை தாண்டி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு அடைக்கலம் மற்றும் பாதுகாப்பு கொடுத்தது. அருணா ஆசப் அலி,ஆச்சார்யா பட்வர்தன், நானா படேல் மற்றும் சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத் சிங்குடன் தேடப்பட்ட ராஜகுரு ஆகியோர்களும் அதில் அடங்குவார்கள்.
ஸ்வராஜ்யம் என்கிற ஒற்றை இலக்கை அடைவதற்கு முன்னெடுக்கப்பட்ட இந்த வெள்ளையனே வெளியேறு போராட்ட காலம் வரலாற்றின் தன்னிகரற்ற காலகட்டமாக விளங்கியது. இதில், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நேரடியான போராட்டத்துடன் காங்கிரஸ் தலைமைக்கு முழுமையான ஆதரவை வழங்கி உதவியது. இதன்பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை மிக மிக கவனமாக, கடுமையாக கண்காணிக்க ஆரம்பித்தது. பிரிட்டிஷ் உளவுத்துறை, CID, மற்றும் உள்துறை போன்றவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடவடிக்கை பற்றிய அறிக்கைகளை அடிக்கடி பரிமாறிக்கொண்டது. “இவர்கள் தேசத்திற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயங்காத, பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான தன்னார்வ தொண்டர்கள்” என்று அந்த அறிக்கைகளில் குறிப்பிடபட்டிருந்தது.1943-இல் பிரிட்டிஷ் அரசு குறிப்பிட்டிருந்த ஒரு அறிக்கையில் “ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உண்மையான நோக்கமே பிரிட்டிஷ் அரசை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதுதான்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு
இந்த கால கட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் குருஜி, பாபாசாஹேப் ஆப்தே மற்றும் பலசாஹெப் தீயோர்ஸ்போன்றோர் அரும்பணிகள் ஆற்றியிருக்கிறார்கள். 1946 கால கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவைபெற்றுக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி மெதுவாக திசை மாறியதற்கு காரணம் முஸ்லீம் இயக்கங்களின்மிரட்டல்கள்தான். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாகிருஷ்ண சேத் என்பவரதுபார்வையில் “ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்பது புத்தியற்ற இளைஞர்களின் கூட்டமல்ல, மாறாக அது தேசத்தைபாதுகாக்க கூடிய கட்டுப்பாடுடைய தேசபற்றுடைய இளைஞர்கள் கூட்டம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
பிரிவினை அறிவித்த பிறகு, பஞ்சாப் நிவாரண குழு மற்றும் ஹிந்து சஹாயதா சமிதி போன்ற குழுக்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி அவர்களால் அமைக்கப்பட்டு பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டது.
சர்தார் ஹார்வன்ஸ் சிங் என்பவர் எழுதிய ஒரு கடிதத்தில் எப்படி ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் ஒரு மனித சங்கிலிபோல் அரண் அமைத்து ஹர் மந்திர் சாஹிப் என்கிற சீக்கிய கோயில் முஸ்லீம் லீக் தொண்டர்களால் தாக்கப்பட்டபோது உள்ளே இருந்த சீக்கியர்களை காப்பாற்றினார்கள் என்கிற சம்பவம் இடம்பெறுகிறது. இதை படிக்கும் போது நடுக்கமே ஏற்படும் அளவு கொடூரங்கள் நிகழ்த்தப்படிருப்பது தெரிய வருகிறது.
பிரிவினையின் போது தற்போது ஆசாத் காஷ்மீர் பகுதியில் இருக்கும் கொட்லி என்ற ஊரில் இந்திய ராணுவம் அங்குள்ள இந்துக்களுடனும் ஸ்வயம்சேவக்குகளுடனும் கரம் கோர்த்து பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் ராணுவத்தை எதிர்கொண்டது. இந்த ஊரில் நடைபெற்ற சண்டையில் எதிரியின் முகாமுக்குள் நுழைந்து வான் வழியாக போடப்பட்ட 12 வெடிமருந்து பெட்டிகளை மற்றும் மருந்துகளை எடுத்துவருவதற்கு சென்ற 6 ஸ்வயம் சேவகர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
பூஞ்ச், கொட்லி, ராஜுவுரி, உதம்பூர், மிர்பூர் போன்ற காஷ்மீர் பகுதிகளில் ராணுவத்திற்கு ஸ்வயம்சேவகர்கள் ஒப்பற்ற உதவிகளை செய்திருக்கிறார்கள். நாள்தோறும் 35 விமானங்களை தரையிறங்கி ஏற்றுவதற்கும், 40,000 மக்களை இடம் மாற்றுவதற்கும் அவர்கள் செயல்பாடுகள் பேருதவியாக இருந்துள்ளன.
குருஜியின் தலைமையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் உதவிகளை ஸ்வயம்சேவகர்கள் திட்டமிட்டு செய்தார்கள். புருஷார்த்தி சாஹித்திய சமிதி, பாஸ்துஹரா சாஹித்திய சமிதி போன்ற கிளை அமைப்புகள் பாதுகாப்பு முகாம்களை அமைத்தது, மேலும், 8 லட்சம் ருபாய் பணத்தை வசூல் செய்தது, 1500 மூட்டை துணிகள் மற்றும் தானியங்களை கொண்டு வந்தது, இதன் மூலம் முகாம்களில் இருந்த ஆயிரக்கணக்கானோர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு, புகலிடம் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சுதந்திர போராட்டம் என்பதையும் தாண்டி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ உதவி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்துப்பணி செய்வது என்று தொடர்ச்சியான செயல்களில் ஈடுபட்டு வந்தது. சர்தார் வல்லபாய்படேல் போன்ற தலைவர்கள் “சுதந்திரத்திற்கு பிறகான காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணிச்சலான நடவடிக்கைகள் பல ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்றி இருக்கிறது” என மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.
மகாத்மா காந்தி ஒரு முறை முஸ்லீம்கள் சூழ்ந்த ஹரிஜன கிராமத்தில் தங்கிய போது, அவரது பாதுகாப்புக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவி கோரப்பட்டது. அந்த சமயத்தில் மார்ச் 16, 1947-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பற்றி பேசியதாவது “ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டுப்பாடு உடைய இயக்கம். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் அப்படி ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் அதை பொய்யாக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு” என்று கூறினார்.
காங்கிரசை கலைத்து விட்டு, பல சித்தாந்தங்களை உடைய பல கட்சிகள் உதயமாகும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற காந்தியின் கோரிக்கை எப்படி புறந்தள்ளப்பட்டது என்பது வரலாறு விவாதிக்க மறுத்த, மறுக்கும் ஒரு மிகவும் அவசியமான விஷயம். சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்பிரபலமாகிக்கொண்டிருந்த போது, காங்கிரஸ் கட்சி காந்தியின் கொலையை காட்டி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைஇருட்டடிப்பு செய்து களங்கப்படுத்தியது. ஆனால், அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி வார்த்தைகளில் காந்தியின் கொலை என்பது “தேச விரோதமான, மன்னிக்க முடியாத குற்றம்”.
காங்கிரஸ் கட்சி அசுர பலம் கொண்டிருந்த காலத்திலேயே காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றங்கள் முதல் கமிஷன்களை உறுதிப்படுத்தியும், காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சம்பந்தப்படுத்தி மட்டம் தட்டும் முயற்சி 74 ஆண்டுகளாக் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அனைத்து கட்டுக்கதைகளையும் தூக்கி எரிந்து, இன்றைய பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள்,மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் என இந்திய தேசத்திற்கு தேவையான மிகச்சிறந்த ஆளுமைகளை உருவாக்கி வீரு நடை போட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம். அற்பர்கள் ஆடுவார்கள், ஆர்ப்பரிப்பார்கள், உயர்ந்தோர் அடக்கத்தின் அடையாளமாய் இருப்பர். ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அடக்கமாய் தேசப்பணியை செய்து கொண்டே இருக்கிறது.