முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் தினத்திற்கு சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு மே 18-ஆம் நாளன்று இந்திய உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பேரறிவாளனை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி கருணை அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.
01.09.1990 அன்று சென்னையில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் பத்மநாபா அவர்களின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் மறைந்த எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலை புலிகள் இயக்கத்தை மிகத்தீவிரமாக குற்றம்சாட்டிய அவர்
“கொலைபாதகர்களே, கொலை தவிர வேறு கொள்கை இல்லாதவர்களே. இந்தியாவோ, தமிழக மக்களோ ஒரு போதும் ஏற்க முடியாது. LTTE இயக்கத்தை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு இருப்பவர்களாக இருக்க வேண்டும். மனிதாபிமானமுடைய, அரசியலுடைய, நெறியுடைய, பண்புடைய, தமிழ் அறிந்த, தமிழ் நாகரிகம் அறிந்த ஒருவரும் LTTE இயக்கத்தை ஆதரிக்க முடியாது. இவர்களை பார்க்கும் போது நாணத்தால் நாங்கள் தலை குனிகின்றோம்.”
என்று தனது கம்பீரக்குரலில் முழக்க மிட்டார்.
18-ஆம் தேதி பேரறிவாளனை கட்டி அணைத்து ஆனந்தத்தை பகிர்ந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 21-ஆம் தேதியான இன்று பேரறிவாளன் கொன்ற முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவரின் உருவ படத்திற்கும் மரியாதை செலுத்தி உள்ளார். இதைவிட ஒரு வன்மமுரணை இந்தியாவில் எந்த முதல்வரேனும் செய்துள்ளதாக வரலாறு உள்ளதா?
1997-ஆம் ஆண்டு ஜெயின் கமிஷன் அறிக்கை ராஜிவ் காந்தி கொலைக்கு அப்போதைய மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு LTTE அமைப்புக்கு “மறைமுக ஆதரவு” அளித்ததாக குற்றம் சாட்டி இருந்தது. இதையடுத்து தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவை காங்கிரஸ் வாபஸ் வாங்கி அப்போதைய ஐ.கே.குஜராலின் மத்திய அரசு கவிழ்ந்தது.
எந்த கட்சியை தனது தலைவர் ராஜிவ் காந்தியின் கொலைக்கு காரணமென குற்றம் சாட்டினர்களோ,அதை முன்னிட்டு ஒரு அரசினை கவிழ்த்தார்களோ,அதே கட்சியுடன் இதே காங்கிரஸ் கட்சி 2004 முதல் தற்போது வரை(2013 முதல் 2015 வரை 2 ஆண்டு நீங்கலாக) கூட்டணியில் இருந்து வருகிறது..
வாக்குகளுக்காக, உதிர்த்து வீசப்படும் சீட்டுகளுக்காக, ஆட்சி அதிகாரத்திற்காக அனைத்தையும் மறந்த காங்கிரஸ் கட்சி அரசியலின் குறைந்தபட்ச புள்ளிக்கு(lowest point) ஏற்கனவே சென்று விட்டது என்று கருதிய என் போன்றவர்களுக்கு, கடந்த 4 நாட்கள் அக்கட்சி நடந்துக் கொள்ளும் விதம் கோபத்தையும், எரிச்சலையும்தான் வரவைக்கிறது. இயலாமையா, ஒவ்வாமையா அல்லது வேறு ஏதேனும் மிகப்பெரிய சதி நம் கண் முன் இருந்து மறைக்கப்படுகிறதா? என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவன், ராஜிவ் காந்தி கொலையை துல்லியமாக அரங்கேற்ற தனது கூட்டாளிகளுடன் வி.பி.சிங் கூட்டத்திற்கு சென்று ஒத்திகை பார்த்த ஒருவன், போலீஸார் உட்பட 18 தமிழர்கள் உயிரிழப்பதற்கு காரணமான ஒருவன் சட்ட நுணுக்கங்களை கொண்டு விடுதலை செய்யப்படுவதும் அதை கொண்டாடுவதும் என தமிழினத்தின் மீது நீங்காத கரை படிந்துள்ளது கடந்த 4 நாட்களின் செயல்கள் வழியே. அதை காங்கிரஸின் கூட்டணி கட்சிகளே அரங்கேற்றுகிறது.
அப்படி தனது தலைவரை கொன்ற கொலைகாரர்களை தூக்கி கொண்டாடும் கூட்டணி கட்சிகளை கண்டிக்கக்கூட திராணி இல்லாமல், செத்த பிணம் போல இருக்கும் காங்கிரஸ் கட்சியை பார்த்தால் கேவலமாக இருக்கிறது.
இந்த அசிங்கங்களை கண்டும் காணாது போல் அமைதி காக்கும் காங்கிரஸின் மத்திய தலைமையும், நேரு குடும்பமும் அவர்கள் மீதான ஒரு வித அருவருப்பை உண்டு செய்கிறார்கள். இதில் மேலே சொன்னது போல் வேறு ஏதும் மிகப்பெரிய சதிவலை இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவி. சிற்றரசு ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்கை நாராயணன் போன்றோர் தி.மு.க பேரறிவாளனை கொண்டாடுவதை எதிர்த்து கடுமையான எதிர்வினையாற்றுகின்றனர். இவர்களுக்கு இருக்கும் திராணியும், நேர்மையும், நெஞ்சுரமும் காங்கிரஸ் தலைமைக்கு இல்லாதது துரதிஷ்டமே.
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் முதல், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர் என பொதுவெளி மனிதர்கள் பலரும் பேரறிவாளன் எனும் கொலைகாரனின் விடுதலையை ஏதோ தியாகியின் விடுதலை போல் கொண்டாடி வருவது தமிழினத்தின் மீது ஆறாத வடுவை உண்டாக்கியது என்றே சரித்திரம் நம்மை கேலி செய்யும்.