கைதும் – ஒரு வருடமும் – தி.மு.க-வின் நயவஞ்சக அரசியலால் கைது செய்யப்பட்டது ஏன்?

ஜூன் 16, 2023 சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு இதே நாள் இரவு தமிழக காவல்த்துறை அத்துமீறி என் வீடு புகுந்து கைது செய்து,இரவோடு இரவாக மதுரை அழைத்து சென்று காவல்த்துறை custody கிடைக்காமல் குறைந்தபட்சம் நீதிமன்ற custody-யை போராடி பெற்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 6 நாள் சிறைவாசம், ஆறு நாளும் solitary confinement(தனிமை சிறை).  இதற்கு முன்பு கைதானதே இல்லை, பலர் என்னிடம் கைதே ஆனதில்லை நீயெல்லாம் என்ன அரசியல்வாதி? என பலமுறை கேட்டதுண்டு. அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மட்டுமே பயன்பட்ட […]

ஜூன் 16, 2023

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு இதே நாள் இரவு தமிழக காவல்த்துறை அத்துமீறி என் வீடு புகுந்து கைது செய்து,இரவோடு இரவாக மதுரை அழைத்து சென்று காவல்த்துறை custody கிடைக்காமல் குறைந்தபட்சம் நீதிமன்ற custody-யை போராடி பெற்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 6 நாள் சிறைவாசம், ஆறு நாளும் solitary confinement(தனிமை சிறை). 

இதற்கு முன்பு கைதானதே இல்லை, பலர் என்னிடம் கைதே ஆனதில்லை நீயெல்லாம் என்ன அரசியல்வாதி? என பலமுறை கேட்டதுண்டு. அப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மட்டுமே பயன்பட்ட ஒரு கைது. ஆனால், பல வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுத்தது.

முதலில் ஜூன் 16, 2023 நாள் எனக்கு எப்படி இருந்தது என்பதை விவரிக்கிறேன். கைதாவதற்க சரியாக 4 நாட்களுக்கு முன்பு(ஜூன் 11, 2023) மத்திய உள்த்துறை அமைச்சர் திரு.அமித் ஷா #தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் ஆய்வு கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டம் முடிந்து அவர் வேலூர் சென்றாக வேண்டும். ஆனால் அந்த ஹெலிகாப்டர் அரை மணி நேரம் தாமதமானது. அண்ணன் அண்ணாமலை அவர்கள் நான் விமான நிலையம் சென்று ஏற்பாடுகளை பார்க்கிறேன், நீ அதுவரை அவரிடம் பேசிக்கொண்டிரு என கூறினார். எனக்கோ பேரதிர்ச்சி மற்றும் ஆனந்தம். அரசியல் சாணக்கியர் என அன்போடு போற்றப்படும் ஒருவருடன் இத்துனை நேரம் உடனிருக்கும் வாய்ப்பா என மலைத்து நிற்க, உடன் சில மூத்த தலைவர்களும் வந்து அமித் ஷா அவர்களுடன் உரையாட துவங்கினர். அப்போது அவர் பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்துக்கொண்டார். 

குறிப்பாக, 2010 காலக்கட்டத்தில் குஜராத் முதல்வர் மோடிக்கு மிக நெருக்கமாக இருந்த ஒரே காரணத்தினால் காங்கிரஸ் கட்சி இவர் மீது மிகுந்த வன்மத்தோடு பல பொய் வழக்குகளை புனைந்து சக்திவாய்ந்த குஜராத் மாநில அமைச்சராக இருந்தவரை குஜராத் மாநிலத்திற்குள்ளேயே காலை வைக்காத படி பார்த்துக்கொண்டது. அச்சமயத்தில் இவர் டெல்லியில் இருந்தாராம். காலை 9 மணிக்கு நூலகத்திற்கு சென்று இரவு 8 மணி வரை நூலகத்தில் தான் இருப்பாராம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் யுக்தி, வளர்ச்சி, சக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து மொழி புத்தகங்களையும் உட்கார்ந்து தினந்தோறும் படித்தாராம். ஹிந்தி அல்லாத மொழி புத்தகங்களை மொழிபெயர்த்து படித்தாரம். காங்கிரஸ் கட்சி எப்படி வளர்ந்தது? அதன் சக்தி என்ன? அது எப்படி அசைக்க முடியாத சக்தியாக இந்திய அரசியலில் கோலோச்சியது? ஆகியவற்றை நூற்றுக்கணக்கான புத்தகங்களில் படித்து தெரிந்துக்கொண்டாராம். இது 2010 முதல் 2012 காலக்கட்டம். ஆக, காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பை 2014 தேர்தலிலும், 2019 தேர்தலிலும் அமித் ஷா உடைப்பதற்கு அவர் படித்த புத்தகங்கள் மிகப்பெரிய காரணி என்றார். நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது அவர் அச்சமயம் படித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை காண்பித்தார். அப்புத்தகத்தை அன்று இரவுக்குள் படித்து முடிப்பது அவரது இலக்கு என்றும், அடுத்த நாள் படிக்க வேண்டிய புத்தகம் தனது பையில் தயாராக இருக்கிறது என்றும் கூறினார். இந்த உரையாடலின் சாராம்சம் “உனது எதிரியை வீழ்த்த வேண்டுமெனில் அவனைப்பற்றி முழுவதுமாக முதலில் தெரிந்துக்கொள்” என்பதாகும். 

நிற்க. தற்போது 4 நாட்கள் கழித்து ஜூன் 16, 2023. மாலை வேளையில் சோழிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் இல்லத்திற்கு சென்றேன். அவரிடம் திரு.அமித் ஷா அவர்களிடம் பேசிய உரையாடலை பகிர்ந்து அதன் பொருட்டு தமிழக அரசியலுக்கு ஏற்றது போல என்னென்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என கேட்டேன். அவர், முதலில் வனவாசம், பிறகு நெஞ்சுக்கு நீதி அனைத்து பாகங்கள் என்றார். அங்கிருந்தே தி.நகரில் உள்ள ஒரு புத்தகக்கடையில் இந்த புத்தகங்களை எடுத்து வைக்குமாறு தொலைபேசியில் சொல்லிவிட்டு புத்தகங்களை வாங்கிக்கொள்ள சென்றேன். 

இப்புத்தகங்களை வாங்கிவிட்டு எனது இல்லத்திற்கு வந்தேன். மணி இரவு ஒரு 10.30 இருக்கும். தம்பி முகேஷ் மட்டும் உடனிருந்தார். மாடியில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென காலிங்பெல் சத்தம், யாரென்று பால்கனிக்கு சென்று பார்த்த போது ஒரு நான்கு பேர் வாசலில் இருந்தனர். எனது பக்கத்து வீட்டில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் இருக்கிறார். அவர் வீட்டில் காலிங்பெல் அடித்தோம், அவர் கதவை திறக்கவில்லை கொஞ்சம் கீழே வந்து உதவி செய்ய முடியுமா? என்று கேட்டனர். நானோ சற்றும் யோசிக்காமல் வேறு ஏதோ பிரச்சனையோ என கீழே சென்று கதவை திறக்க உடனடியாக 30 பேர் சுற்றி வளைத்து என்னை கைது செய்வதாக கூறினர். வாசலில் கேட் பூட்டப்பட்டு இருந்தது. காலிங் பெல் அடித்த 4 பேர் சுவரேரி குதித்து தான் வந்தனர் என்பது எனக்கு பிறகு தான் புரிந்தது. நான் எதற்காக கைது என்று கேட்டதற்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. கையில் இருந்த கைபேசியை பிடுங்கிக்கொண்டனர். நான் மேலே சென்று சட்டை, வேட்டி அணிந்துக்கொண்டு வருகிறேன் என்பதற்கு மிகுந்த சலனத்துடன் ஒப்புக்கொண்டு என்னுடனே 4 போலீசார் வந்தனர். மேலே எனது அறையில் மேஜையில் இருந்த லேப்டாப், iPad, 2 iPhone, 1 Samsung Phone என அனைத்தையும் பறிமுதல் செய்தனர். கீழே அழைத்து வந்து என் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்ததால் யாரிடமும் தகவல் சொல்லாமல் என்னை போலீஸ் வாகனத்தில் தி.நகர் வெங்கட்நாராயணா ரோடு சிக்னல் வரை அழைத்துச்சென்று ரோட்டில் வைத்து சில காகிதங்களில் கையெழுத்து வாங்கினர். 

என்னவொரு பொறுத்தம் பாருங்களேன். கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து வைத்த அடுத்த கனம், கருணாநிதி அவர்களின் மகன் ஸ்டாலின் ஏவிய போலீஸாரால் நான் கைது. அதிகார துஷ்ப்ரயோகத்தின் உச்சம். இருந்தாலும் வேடிக்கை.

நான் போலிஸாரிடம் எனது தாத்தாவிற்கு 99 வயது, தாய்க்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது, வேலை செய்யும் பணிப்பெண் தான் வீட்டில் இருக்கின்றனர், எனவே கைதை குறித்து நான் பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும், அதற்கு மட்டும் அனுமதி கொடுங்கள் என மன்றாடியும் பலனில்லை. உடனிருந்த முகேஷ் நண்பர்களுக்கு தகவல் சொல்ல கட்சியினருக்கு தகவல் போய் ஒரு மணி நேரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 500 பேர் கட்சி சொந்தங்கள் கூடினர். ஊடகத்திற்கும் தகவல் தெரிந்தது. 

அதற்கு பின்பு நடந்ததெல்லாம் பொதுவெளியில் உள்ளது. ஆனால், ஒரு அரசாங்கம் ஒருவரை பழி வாங்க வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை கண்க்கூடாக புரிய வைத்தது எனது கைதும் அதன்பின் நடந்த நிகழ்வுகளும். என்னை ஏன் கைது செய்தனர்? என்னிடம் இருந்து எதை கைப்பற்ற துடித்தனர்? என் கைதுக்கு 2 நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சர் கைது என அரசியல் சதுரங்கம் மிக நீண்டது. அது பின்னொரு காலத்தில் பதிவிடுகிறேன்.

ஆனால், இந்த கைது என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கமும், வலியும் கொடியது. முதலில் என்னை சிறு வயது முதல் வளர்த்த என் தாய் வழி தாத்தாவின் 100-வது பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனது. ஜூன் 20, 2023 எனது தாத்தாவிற்கு 100 வயது பூர்த்தியானது. அவரது பிறந்தநாளை விஷேஷமாக உற்றார், உறவினரை அழைத்து கொண்டாட பல ஏற்பாடுகளை செய்திருந்தேன். கொண்டாட்டம் வேண்டாம், குறைந்தபட்சம் ஜூன் 20 அவரிடம் ஒரு வாழ்த்தாவது சொல்லலாம் என்றால் அதுக்கூட முடியாத அளவு அன்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அண்ணாமலை அண்ணன் அந்நாளில் என் சார்பில் வீட்டிற்கு வந்து தாத்தாவுக்கு கேக் வெட்டி 100-வது பிறந்தநாளை என் ஸ்தானத்தில் இருந்து கொண்டாடினார்; மேன்மக்கள் மேன்மக்களே.

இரண்டாவது, எனது முனைவர் பட்டத்திற்கான VIVA எனப்படும் இறுதித்தேர்வு ஜூன் 26, 2023 அன்று எனது பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்தது. அதுவும் நடக்காமல் போனது.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு என்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட MacBook, iPad, iPhones ஆகிய எவற்றையும் இன்று வரை என்னால் மீட்டெடுக்க முடியவில்லை. வழக்கு மேல் வழக்கு, விசாரணை மேல் விசாரணை, வாய்தா என குற்றப்பத்திரிக்கை கூட இன்று வரை தாக்கல் செய்ய முடியவில்லை இந்த அரசால். ஆனால் இவ்வழக்கிற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத எனது பொருட்களை மட்டும் இன்னும் தர எதிர்ப்பு தெரிவிக்கிறது தி.மு.க அரசு. 

எனது MacBook-ல் எனது 15 வருட data-வை தாண்டி, முக்கியமான அவணங்கள், குறிப்பாக எனது முனைவர் பட்ட ஆய்வுகள் அத்தனையும் உள்ளன. ஒரு வருடமாக பயன்படுத்தாமல் மதுரை நீதிமன்றத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனது பொருட்களை மீட்டெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை ஜூன் 18, 2024 அன்று விசாரணைக்கு வருகிறது. பார்ப்போம் இன்னும் எத்துனை நாட்கள் தான் இழுத்தடிக்கிறார்கள், கொடுமை படுத்துகிறார்கள் என்று.

ஆனால் இந்த கைது பல நண்பர்களை ஏற்படுத்தியது, பல துரோகிகளை காட்டிக்கொடுத்தது. 

ஒரு வருடமாகியும் எந்த சமரசத்திற்கும் நான் சம்மதிக்கவும் இல்லை, முனையவும் இல்லை.

நெஞ்சுரத்துடன் எனக்கெதிராக வெளியிலும், கட்சிக்குள்ளும் பின்னப்பட்ட சதிவலைகளை எதிர்கொண்டேன். துணிச்சலுடன் தொடர்ந்து எதிர்கொள்கிறேன்; வெற்றியும் பெறுவேன். 

ஆண்டவன் உண்மையின் பக்கம் எப்போதுமிருப்பார் என்ற நம்பிக்கையில் தொடர்கிறது நம் களப்பணி.

எனது கைது, அதை சுற்றி நடந்த அரசியல், சுவாரஸ்ய நிகழ்வுகள் என அனைத்தையும் ஒரு நாள் பகிர காத்திருக்கிறேன். தக்க சமயத்தில் சந்தர்ப்பம் அமையும் போது நிச்சயம் பகிருவேன்.

நன்றி

Dr. SG Suryah

Dr. SG Suryah

Writer, Columnist & Author

More about him

Make A Comment

Keep reading

The Day Congress Agreed to Gift Assam to Pakistan

Yesterday, as I watched Prime Minister Narendra Modi speak in Guwahati, I felt a strange mix of emotions—vindication,…

அயோத்தி ராமர் கோவிலின் ஒவ்வொரு கல்லிலும் பா.ஜ.க-வின் வியர்வை!

இந்துக்களின் நூற்றாண்டு கால ஏக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா இனிதே அரங்கேறியது. பிரதமர் மோடி ராமரின் வஸ்திரங்கள் எடுத்து…
SG Suryah in RSS Pathasanchalan

சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பு!

ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் இந்திய சுதந்திரத்திற்கு அளப்பரிய பங்காற்றி இருந்தாலும், சுதந்திர போராட்டத்தின் போது மாபெரும் சக்தியாக விளங்கிய போதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுதந்திர போராட்ட…
Close

Bold. Relentless. For the People.

UP